×

சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் இடையே பாலாற்றில் ரசாயன நச்சுடன் ஓடும் கழிவுநீர்: தூர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

வேலூர்: வேலூர் பாலாற்றில் ஒருகாலத்தில் மழைவெள்ளம் பால்போல ஓடியதாகவும் இதனால் ‘பாலாறு’ என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த பாலாற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரைக்கொண்டு, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், நீர்பாசன வசதி பெற்றனர். இப்படி பாலாற்றை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில், பாலாற்றில் ஆக்கிரமிப்பு, இரவு-பகல் பாராமல் நடக்கும் மணல் கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்தன. மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்ட பாலாற்றில் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒரு புறம் என்றால், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றொரு புறம். இதனால் தற்போது பாலாறு, ‘பாழாறு’ ஆக மாறி வருகிறது.  

திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி, வேலூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களிலும் பாலாற்றில், நச்சு கலந்து கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால் பாலாற்றில் நச்சு கலந்து மிக ஆபத்தான நுரையுடன் கூடிய கழிவுநீர் கலக்கும் நிலையாக உள்ளது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவையும் தங்கள் பங்குக்கு கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே பாலாற்றில் விடுவதால் பாலாறு இன்று விஷமாக மாறி வருகிறது.

இந்நிலையில், சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் இடையே உள்ள பாலாற்று தரைப்பாலம் வழியாக  காட்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு தினசரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இப்படி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் பாலாற்றில், நச்சு கலந்த நுரையுடன் கருமை நிறத்தில் கழிவுநீர் செல்கிறது. இந்த தரைப்பாலத்தை கடக்கும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் தூர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாலாற்றை பாதுகாக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது.

இதனால் பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்து குடிநீரும் மெல்ல, மெல்ல குடிக்க லாயக்கற்ற நிலைக்கு மாறிவருகிறது. எனவே மாவட்ட கலெக்டர், உடனடியாக பாலாற்றில் கலக்கும் நச்சு கலந்த, கழிவுநீர் குறித்து ஆய்வு செய்து, எங்கிருந்து இந்த கழிவுநீர் வெளியேறுகிறது என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


Tags : Chemical poisonous sewage in the lake between Sattuvachari-Kangeyanallur: People suffer due to stench
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்